பிற்போக்குவாத சனாதன சக்திகளை எச்சரித்த அக்குரல் அய்யா நெல்லை கண்ணன் அவர்களின் ஆவேசக்குரலே ஆகும். அவர் தீவிரமான கடவுள் நம்பிக்கையாளர். ஆன்மீகப் பற்றாளர். சாதி, மத அடையாள சங்கிலிகளால் தன்னைப் பிணைத்துக்கொள்ளாமல், தமிழ், தமிழர், தமிழ்நாடு என தமிழின தேசிய அரசியலை உயர்த்திப் பிடித்தவர். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழினத்திற்கான பேரிழப்பாகும். தமிழருக்கான பாதுகாப்பையும் எனக்கான துணிவையும் அளிதத அவரின் போர்க்குரலை இழந்துவிட்டோமே என்கிற பெருங்கவலை என்னை ஆக்கிரமித்து அழுத்துகிறது. அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
அரசியல் களத்தில் அவர் நீண்ட நெடிய அனுபவம் உள்ளவர். அரசியல் மற்றும் இலக்கிய தளங்களில் அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் பேசுகிற நாவன்மை மிக்கவர். அவருடைய ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்காக எண்ணற்ற பல விருதுகளைப் பெற்றவர்.
பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர்அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், மக்கள் திலகம் எம்ஜிஆர் போன்ற செல்வாக்குமிக்க அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருந்தவர், அவர் காங்கிரஸ் பேரியக்கத்தை சார்ந்தவர் என்றாலும் கூட அவரிடத்தில் தமிழ்மண் வாசனையே மேலோங்கியிருந்தது. அவர் ஆன்மீக நம்பிக்கையாளராக இருந்தாலும் சனாதன அரசியலுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிரானவர். மக்களை சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் பிளவு படுத்துவதை ஒருபோதும் ஏற்காதவர். அவற்றையெல்லாம் கடுமையாக விமர்சித்தவர். மனதில் பட்டதை பளிச்சென பேசக்கூடிய துணிச்சல்மிக்க பேச்சாளர். அந்த அளவுக்கு ஆழமான கொள்கை தெளிவுள்ளவர். அத்தகு ஈற்றலும் பெருமையும் மிக்க அவரின் மறைவு ஈடுசெய்ய இயலாதது.
அவரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் உள்ளிட்ட யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், இலட்சோப இலட்சம் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எனது செம்மாந்த வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக